குருவிற்கு நன்றி…
சுவிஸ்லாந்து தேசத்தின் மையப் பகுதியில் ஓர் அழகாபுரி அந்த அழகாபுரியின் நடுவே ஒரு ஆடற் கலையாலயம் அதுவே லுட்சேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பரததர்சனா நடனாலயம்.
அவ்வாலயத்தில் ஓர் தெய்வம் நடனாலயத்தின் இயக்குனராகவும், குருவாகவும் அதைவிட மேலான பணியாம் போர் சூழலில் புலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து அல்லற்ப்படும் தாயக உறவுகளுக்கு பரததர்சனா அறக்கட்டளை அமைப்பால் அரும் பெரும் சேவையாளராகவும் விழங்குகின்றார். அவர்தான் கண்கண்ட தெய்வம் ஆசிரியை காயத்திரி திஷாந்தன். அவர்களின் சேவைகளை எம்மால் எழுத்தாலோ, சொல்லாலோ அளவிட முடியாது. நாம் அவரை ஆசிரியராகப் பெற்றது நாம் செய்த நற்பயனும், கடவுள் நமக்கு அளித்த பெருவரமும்.
தன்னை தியாகியாக்கி எம் முன்னேற்றத்திற்காய் உழைத்தவர். எம்மை அன்பினால் அடிப்பவர், ஆறுதல் அளிப்பவர். நாம் துவண்ட போதெல்லாம் எம்மை தட்டி எழுப்புவார். அவரது அயராத உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் நாம் இன்று அரங்கப்பிரவேசம் காண்பதையிட்டு நாமும் சக மாணவர்களும் பெற்றோர்களும் பேரானந்தம் கொள்கின்றோம்.
பிறந்த பயனை அனுபவித்து விட்டோம் என்ற உணர்வு இன்று எம்முள். இன்று நாம் உயர்ந்து நிற்கின்றோம் அதற்கு அத்திவாரம் இட்டு ஏற்றிவிட்ட ஏணிப்படியை எம் வாழ்நாளில் மறவோம். தான் பெற்ற மகளையும் இணைத்து ஓர் தாய்ப்பிள்ளைகள் போல் அரவணைத்து கற்பிப்பவர். அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம். அதற்கமைய சில சமயங்களில் எம்மால் இயலாத போதும் நம்மை நகர வைப்பதில் வல்லுநர். எவ்வாறான இன்பமும் துன்பமும் நேர்கையிலும் எம்முடன் இணைந்து கொள்வார்.
நம் தோழியாகவும் சில சமயங்களில் மாறிவிடுவர் பெற்றோருடன் கூற முடியாத விடையங்களையும் நாம் அவரிடம் கூறி மகிழ்வோம். பொறுமை, கட்டுப்பாடு, சாந்தம், அன்பு, ஆனந்தம் போன்ற குணங்களைத் தன்னகத்தே கொண்டவர் எந்நேரமும் சிரித்த முகத்துடன் இன்பமாக காட்சியளிப்பார்.
எம் ஆசிரியருடன் இணைந்து எம் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரின் கண் போன்ற கணவர் திஷா மாமா அவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குருவானவரின் நடனாலயம் சிறப்புற தழைத்தோங்கி வளர முழுமுதற் படியாக சேவை செய்து வரும் அவர்கள் தேவையறிந்து சேவை செய்பவர். அரங்கேற்ற வேளைகளிலும் சரி, ஆண்டு விழாக்களிலும் சரி திசா மாமா தானே முன் என்று பல வழிகளிலும் நமக்காக உழைப்பவர். அவரைத்தாரமாக பெற்றமை எம் ஆசிரிய பெருந்தகைக்கு இறைவன் அளித்தகொடையே. குருவை சிவ மெனக்கூறினன் நந்தி என்பது திருமந்திரப் பாடல்.
நாம் யாரை குருவாக நினைக்கின்றோமோ அவரே எம் வழிபாட்டுக்குரிய தெய்வமாம் ஆனால் எம் ஆசிரியை அதைவிட ஒரு படி உயர்ந்த நடமாடும் தெய்வமாகும். இன்று எம்மை இந் நிலைக்கு உயர்த்தியுள்ளார். நாம் இன்னும் பல சாதனைகள் செய்து நடனக் கலையில் சிறந்து விளங்கி எம் ஆசிரியருக்கு பெருமை சேர்ப்போம். எம் நடனாலயம் மென்மேலும் வளர்ந்து அடுத்து வரும் மாணவிகளும் எமைத்தொடர்ந்து அரங்கேறுவது திண்ணம். குருவே உங்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் எம்மிடம் இல்லை. நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் உங்கள் புகழ் தழைத்தோங்கும் உலகமெல்லாம் நன்றி நன்றி நன்றி.
அமலி சகானா
மகள் ஷாஜினி.
