“ஆடலின் அசைவில் ஆன்மா ஆடும்,
பாவனையின் மலரில் பரம்பொருள் வாழும்”………
‘பரதநாட்டியம் ‘நம் பாரம்பரியத்தின் மண்வாசனையும், ஆன்மீகத்தின் தெய்வீக வாசலுமாகும்.
நம் முத்தமிழானது தம்முள் ஒன்றியவரை கடவுளோடு ஒன்றிக்கும் சிறப்புடையது. அதில்
நாட்டியமானது அனைத்திலும் முதன்மை பெற்று குழந்தை முதல் முதியோர் வரை அனைவரையும் ஈர்க்கவல்லது. கைவழி நயனமும் கண்வழி மனமும் செல்லும் நாட்டியத்தின் ஒருமித்த நிலை மாணவ சமுதாயத்தை நெறிப்படுத்த வல்லது.
அந்தப் தெய்வீக வாசலை இன்று தாண்டி, அமலி பிரதாபன் தம் குரு திருமதி. காயத்திரி திசாந்தன் அவர்களின் அன்பும், அருளும், ஆற்றுப்படுத்தலும் கொண்டு, பாடலின் கருத்திலும், இசையின் இதயத் துடிப்பிலும், விரல்களும்,விழிகளும் அபிநயிக்க, ஜதிகள் கேட்டு பாதங்கள் நடனமிட, பரதக்கலையின் பண்புதனைப் பாரினுக்குப் பறைசாற்ற அரங்கினில் ஆற்றுகை செய்யவுள்ளார்.
05.10.2025 அன்று, லுட்சேர்ன் பரததர்சனா நடனாலய மேடையில், அமலியின் ஒவ்வொரு அசைவிலும் பூமி அன்னைக்கான வணக்கமும்,
ஒவ்வொரு ஹஸ்தத்திலும் இறைவனுக்கான அர்ப்பணிப்பும் பேசட்டும்.
அமலியைக் கற்பித்து, நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி. காயத்ரி திசாந்தன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும், அத்துடன் அமலியை நல்லோர் நிலைக்கு கொண்டு சேர்க்க வழிநடத்தி உடனிருக்கும் அன்புப்பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் கூறி அமலியின் கலைப்பயணத்தால் இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் பெருமை சேர்த்து, அமலி பிரதாபனின் கலைப்பயணம் இன்னும் தொடர இறையாசீர் வேண்டி என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கிறேன்.
அருட்கலாநிதி. ஆனந்தநாயகம் யூட்ஸ் முரளிதரன்
சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குநர்.
