பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
Bharatha TharshanamBharatha TharshanamBharatha Tharshanam
+41 79 530 45 12
thisha@bluewin.ch
Willisau, Switzerland.

குருவின் வாழ்த்துச் செய்தி

  • Home
  • குருவின் வாழ்த்துச் செய்தி

குருவின் வாழ்த்துச் செய்தி…

ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் அரும்பெருஞ்சுடராய் விளங்குவது பரதமுனிதந்த பரதக்கலையாகும். பாவம், ராகம், தாளம் மூன்றின் முன்னெழுத்துக்களுடன் எழுந்த பரத கலையானது, ஆடலரசன் உலகையே ஆளும் நாயகன் நடராஜ பெருமான் திருவடிகளில் இருந்து தோன்றி இன்று பரிணாமம் பெற்று பரிமளிக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் இன்றைய இளம் சந்ததியினரிடம் தமிழர்களின் கலாச்சாரம் எழுவதோ அழிவதோ என்று தத்தளிக்கின்றது. இந்நிலையில் எமது தமிழ் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பதாக பரதக்கலை திகழ்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பழமையை ஒதுக்கி புதுமையை தேடும் இளம் பராயத்தினரிடம் பழமையும் புதுமையை ஒன்றிணைத்து அடிப்படை தன்மை மாறாமல் கருத்துக்களையும், தமிழர்களின் வரலாற்று கதைகளையும், வீரம் செறிந்த நிகழ்வுகளையும் நடனம் மூலம் சித்தரித்து காட்டுவதில் பரதக்கலை முன்னணி வகிக்கின்றது.
பாமர மக்களும், நவீன காலத்து மக்களுக்கும் கதைகளை கவரத்தக்க வகையில் கண்ணுக்கு விரிந்தளித்து கவலைகளை மறக்கச் செய்வதாக இப் பரதக்கலை விளங்குகின்றது.

இந்த வகையில் இக் கலையினை நான் மழலை வயதிலிருந்து பற்றுடன் பயின்று பட்டம் பெற்று லுட்சேர்ன் மாநிலத்தில் பரததர்சனா நடனாலயத்தினை நிறுவி அதன் இயக்குனராகவும், ஆசிரியராகவும் ஆத்ம திருப்தியுடனும், விசுவாசத்துடனும் கடமையாற்றி வருவது இறைவன் தந்த வரமாகவே நான் நினைக்கின்றேன். பல இளந்தளிர்களை விருட்சமாக்கி வருவதையிட்டு பெரு மகிச்சியடைகின்றேன். எனது பள்ளியில் பயின்ற மூன்று மாணவச் செல்வங்கள் அரங்கப்பிரவேசம் கண்டு என்னை பெருமிதப்படுத்திய நிலையில், இன்றும் முப்பெரும் தேவியராக மகள் ஷாஜினி, அன்புச் செல்வங்கள் அமலி, சாகனா அரங்கேறுவதையிட்டு அளவில்லா ஆனந்தம் கொள்கின்றேன்.

சிறுபிராயத்திலிருந்தே நடனக் கலையை ஆர்வத்துடன் கற்று வந்த இச் செல்வங்கள் விடாமுயற்சியும், வீறாப்பும் கொண்டு மிக இள வயதிலேயே அரங்கேறுவது வரவேற்கத்தக்கதாகும். என் முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் விதை தூவிய இவர்களிடம் நடனக் கலைக்குத் தேவையான நிறைந்த பொறுமையும், மிகுந்த மன கட்டுப்பாடும், சிறந்த குரு பக்தியும் கை கூடி இருந்தது.

இந்நாட்டு கல்வியிலும் சிறந்து விளங்கும் இவர்கள் நடனக் கலையிலும் சளைத்தவர்கள் அல்ல. இரு கரம் இணைந்தாலே ஓசை எழுப்ப முடியும் என்பதற்கேற்ப இவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டனர். இச்சமுதாயத்தில் பிள்ளைகள் சிறந்தவர்களாகத் திகழ பெற்றோர உழைப்பு மிக அவசியம். அந்த வகையில் இவர்களின் பெற்றோர்களிற்கும் நான் நன்றி கூறுகின்றேன். என்னை நாடி வந்த இம் மூன்று மாணவர்களைத் தொடர்ந்து அடுத்த வரும் மாணவர்களும் அரங்கம் ஏறுவர் என்பது என் இன்ப கனவாகும். இவர்களின் கலைப்பயணம் வளர்ந்து, சிறந்துயர்ந்து அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டி என் மாணவ செல்வங்களை வாழ்த்தி நிற்கின்றேன்.

அன்புடன்.
பரததர்சனா நடனாலயம்
இயக்குநர் ஆசிரியர்
திருமதி காயத்திரி திஷாந்தன்.