மகளுக்கு வாழ்த்து…
எம் தாயக மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து ஆணிவேர் அறுந்து அரைவேருடன் அடைக்கலம் கோரி “அகதி” எனும் அந்தஸ்தைப் பெற்று சுவிட்சர்லாந்து தேசத்தில் அடிவைத்த தமிழீழத்தமிழ் குடிமக்கள் நாம். அடுத்தடுத்து அனுபவித்த அளவிலா அல்லல்கள் எம்மினத்திற்கு அத்துப்படி. அத்தனை துயரங்கள் பட்டும் தமிழன் தலைமை நிமிர்ந்து வாழ வேண்டும், தமிழனின் தனித்துவம் பேணப்பட வேண்டும், கலை கலாச்சாரம் பண்பாடு கலையாது தமிழன் என்ற அடையாளத்துடன் திகழ வேண்டும் என்பதற்கேற்ப இத்தேசத்தில் சைவசமய ஆலயங்கள், தமிழ் மொழிக் கல்விக்கூடங்கள், கலை வகுப்புகள் போன்றவை பல வழிகளிலும் இளம் சந்ததியினர்களை வழிநடத்தி வருவதை காணக் கூடியவாறு உள்ளது.
அந்த வகையில் லுட்சேர்ன் மாநிலத்தில் எங்கள் மகள் ஷாஜினி முத்தமிழ்களுள் முதற்கலையான பரதக்கலையை முறையுடன் பயின்று இன்று அரங்கேறும் நிலைக்கு வந்துள்ளமை எண்ணி மனமகிழ்கின்றோம். ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் உணர்வுகள் மீட்டப்படுகின்றன சிறந்த கலைகளை தாயானவள் கேட்கும்போதும் சரி, ரசிக்கும் போதும் சரி பின்பற்றும் போதும் சரி, அதைச் சார்ந்த உணர்வுகள் குழந்தைகளையும் வசீகரித்துக் கொள்ளும் இவ் உண்மையை எமது மகள் வெளிக்கொணர்ந்ததை நாம் கண்கூடாக காண்கின்றோம். மிகச் சிறு பராயத்திலேயே ஆடற்கலையை அறியத் தொடங்கினாள். அதன் மேல் அவளுக்கு இருந்த ஆர்வமும் கற்கும் அவாவும், ஊக்கமும் எமக்கு இன்று ஆக்கமானது. ஷாஜினி இந்நிலைக்கு வருவாள் என்று பெற்றோராகிய எமக்கு அன்றே தெரிந்தது.
எனினும் இரு நாட்டு கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள் அதற்கு தடையாக இருக்கலாம் என்ற எமது அச்சத்தை தவிடு பொடியாக்கி தகர்த்தெறிந்து இன்று நடன அரங்கில் ஏற்றம் காண்பது எம்மை மகிழ்வடைய வைத்துள்ளது. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற வள்ளுவன் வாக்கே இன்று எம் மனதில் எழுகின்றது. எம் நம்பிக்கைக்கு நீர் ஊற்றி அரங்கேற்றம் வரை வந்த எமது செல்வ மகள் மென்மேலும் இக்கலையில் பல சாதனைகள் புரிந்து அடுத்த சந்ததியினருக்கும் இக் கலையை வளர்ப்பாள் என்ற நம்பிக்கையுடனும் பேருவகையுடனும் பெருமிதத்துடனும் மகளை வாழ்த்தி நிற்கின்றோம்.
அன்புடன்.
அப்பா, அம்மா, தம்பி.
