loder

காயத்திரி திஷாந்தன்

  • Home
  • காயத்திரி திஷாந்தன்

குருவின் ஆசியுரை.......

ஆடல் அரசன் நடராஜ பெருமானின் பொற்பாதங்களை வணங்கி , எனது பெற்றோரை பணிந்து எனக்கு இப் பரதக் கலையினை பயிற்றுவித்த குருவினர்களை மனதில் நிறுத்தி, அவர் தம் பாதம் பணிகின்றேன். புலம்பெயர் நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தினை ஆரம்பிக்கும் போது செல்வி துஷாந்தி லிங்கதாஸ் 5 வயது சிறுமியாக என்னிடம் பரதம் பயில்வதற்காக ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார். அவரை தொடர்ந்து செல்விகள் சகானா ,சாருகா குலேந்திரநாதன் வந்து இணைந்தார்கள்.

சிறு வயதில் இருந்தே நாங்கள் மூவரும் சேர்ந்து அரங்கேற்றம் செய்வோம் என கூறிக்கொண்டே இருப்பார்கள்…!
“சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என
நான் இதனை சிறுபிள்ளைகள் தானே கூறுகின்றார்கள் என இருந்து விட்டேன். ஆனால் இவர்கள் வளர்ந்து தாங்கள் தங்கள் “குரு” விற்கு சொன்ன சொல்லை காப்பாற்றி அதனை செயல்முறையில் நடப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அரங்கேற்றம் காணும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது இவர்கள் இறையருள் பெற்ற அதிஷ்டசாலிகளே.

இத்தனை ஆண்டுகள் என்னுடன் தோளோடு தோள் நின்று சுவிஸ் நாட்டில் நடைபெறும் நடன பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றும், பல போட்டி நிகழ்ச்சிகளிலும், தமிழர் கலாசார, சமய நிகழ்வுகளிலும், பல்லின பண்பாட்டு நிகழ்வுகளிலும் பங்கு பற்றி பாராட்டுக்களையும், பெருமையையும் பெற்று தந்தவர்கள். அத்துடன் தமிழ் மொழியையும் திறன் படக்கற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். எனது இத்தனை வருட கலைப் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட, ஏற்படும் வேதனைகள்,சோதனைகளில் நான் மனம் தளராமல் இருப்பதற்கு இந்த மாணவர்களும் எனக்கு துணையாக இருந்துள்ளனர். இவர்களது பொறுமையும் , விடா முயற்சியும்,கலைமேல் கொண்ட பற்றும், குருபக்தியுமே இவர்கள் அரங்கேற்றம் காண்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளது.

புலம்பெயர் நாட்டில் இரண்டு கலாசாரத்தில் வாழும் நம் பிள்ளைகளை நமது கலாசாரத்துடன் வளர்வதற்கு கலைகள் மட்டுமே உறுதுணையாக இருக்கும். அந்த வகையில் இந்த மூன்று மாணவர்களும் தமிழர் கலை, கலாசாரத்துடன் இணந்து வாழ்ந்து இன்று அனைவரும் போற்றும் வண்ணம் அரங்கேற்றம் வரை வந்து ஆசிரியர் ஆகிய எனக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்கள். புலம்பெயர் நாடுகளில் நவீனயுகத்தின் இளம் பராயத்தினர் ஆடம்பர, கேளிக்கை நிகழ்ச்சிகளில் நேரத்தினையும், பணத்தினையும் சீரழித்து வரும் சூழ்நிலையில். எனது இவ் மூன்று மாணவர்களும் தங்களின் கல்வி, தொழில்சார் துறையிலும் முன்னேறிக்கொண்டும் தங்களது பெற்றோர்களை சிரமப்படுத்தாது தாங்கள் உழைப்பில் சேமித்த பணத்தில் இவ் அரங்கேற்றத்தினை நிகழ்த்துவதை நான் பாராட்டியே ஆகவேண்டும்.
கற்பித்தலின் போது நான் எத்தனை முறை கோபப்பட்டாலும் எனது கோபத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்து என்னை சமாதானப்படுத்தி, நடந்தவைகளை மறந்து நான் பெற்ற பிள்ளைகளைப் போல் “Teachu” என பாசத்துடன் அழைத்து மகிழ்வுடன் இக் கலையினை கற்று இன்று எனது கலைப் பயணத்தில் முதலாவது அரங்கேற்றம் நிகழ்த்தும் பெருமை இந்த மாணவர்களையே சேரும்.

“சிறு பிள்ளை வேளாண்மையும் வீடு வந்து சேரும்” என எனக்கும் எனது நடனாலயத்திற்கும் பெருமை சேர்த்து தந்த இந்த மூன்று மாணவர்களையும் மனமார வாழ்த்துகின்றேன். அரங்கேற்றம் என்பது ஆரம்பமே! தொடர்ந்து இக்கலையினை பயின்று அடுத்து வரும் இளம் சந்ததியினருக்கும் இக்கலையினை கற்பிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. துஷாந்தி ,சகானா, சாருகா இவர்களது அரங்கேற்றமானது இறையருளுடன் இனிதே நடைபெற இறைவனை வேண்டி.. எனது ஆசிகளும், அன்பும் என்றென்றும் உங்களுக்கு உரித்தாகும் என என் மாணவ செல்வங்களை வாழ்த்துகின்றேன்.

என் அப்பன் சிவன் பாதம் பணிந்து வணங்குகின்றேன்.
நன்றி.
பரததர்சனா நடனாலயம். அதிபர்
திருமதி காயத்திரி திஷாந்தன்.