loder

அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர்

  • Home
  • அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர்

மனித சமூகத்தை தனித்துவப்படுத்துவதில் பண்பாடு மிகவும் முக்கியமானது. தனிமனித ஆளுமை உலகை செதுக்குவதிலும், சமூகமாக கூட்டுப் பண்பாட்டுச் செறிவை செதுக்குவதிலும் கலைகள் அடிப்படைப் பங்காற்றுகின்றன. அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல
களங்களோடு ஒப்பிடுகையில் பண்பாடு நீடித்து நிலைக்கும் தன்மையும் கொண்டது.

புலம் பெயர் ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை வேரறுந்து வந்த ஒரு சமூகம் தனது வேர்களை இழந்து விடாமல் இன்று விழுதுகளையும் உலகப் பரப்பில் இறக்கிச் சிறப்பதற்கு காத்திரமான பங்காற்றியவை அவர்களின் கடின உழைப்பு, அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தமிழ்க் கல்வி ஒழுங்கு மற்றும் அவர்கள் உருவாக்கிய கலைக் கூடங்கள், அதிலும் சிறப்பாக அவர்களின் நடனப் பள்ளிகள்.

அவ்வகையில் சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ், நடனக்கலை வளர்ப்பதையும், அறநெறி சார்ந்த மானுடத்திற்கான மனிதநேய பணிகளை தவமாகவே செய்து வரும் பரத தர்சனா நடனாலயப் பள்ளியையும், ஆசிரியை திருமதி. காயத்திரி திஷாந்தன் அவர்களையும் நான் மதிப்புடன் போற்றி வணங்குகிறேன்.
இப்பள்ளியின் மாணாக்கர்கள் செல்வி. துஷாந்தி லிங்கதாஸ் செல்வியர். சகானா, சாருகா குலேந்திரநாதன் ஆகியோர் பரத நாட்டியத்தில் அரங்கேறும் நிகழ்வினை உளப்பூர்வமாக வாழ்த்தி மகிழும் அதே வேளை தெய்வீகக் கலையொன்றின் தடம் பற்றி தம்மைத் தகவமைக்கும் செயலில் பிள்ளைகளை வழிநடத்தி ஊக்குவித்த அவர்களின் பெற்றோர்களை தூரத்திலிருந்து மதிப்புடன் வணங்குகிறேன்.

அரங்கேறும் பிள்ளைகளும், இவர்களைப் போன்ற தமிழ்த் தலைமுறையினரும் தான் இன்று தமிழுக்கும் எம் சமூகத்திற்கும் மீதமிருக்கிற தன்னம்பிக்கை.

உங்கள் சலங்கைகள் இசையும் அசைவுகளுமாய் ஆனந்தம் சிலிர்க்க வைக்கும் ஜூன் 18-ல் நமது இனம் கடந்து வந்த வலிகளின் பாதைகளையும், நினைவுகளையும் அந்தப் பாதை எத்தனித்த கனவுகளையும், கனவுகளுக்கான தியாகங்களையும் மறவாதீர்கள் என்றும் வேண்டி, இறையருள் வாழ்த்தி நிறைகிறேன்.

அன்புடன்,
தமிழ்ப்பணி அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர்.
ஜூன் 10,2023.
சென்னை.
தமிழ்நாடு.